ஊரடங்கால் முடங்கிய எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆராய்ச்சிகள்; ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா?
கரோனா வைரஸ் பரவலால் ஆராய்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதால், எம்.ஃபில்., பி.ஹெச்.டி. ஆய்வாளர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மாணவர்கள் அதிக அளவில் கூடும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு, செமஸ்டர் தேர்வுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் தயாரான வேளையில் கரோனா வைரஸ் தொற்றால் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்துத் தேர்வுகளை நடத்த முடியாத நிலைக்குக் கல்வி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களில் எம்.ஃபில்., பி.ஹெச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள், இக்காலகட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டிய சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அப்பணியை முடிக்க முடியாத சூழலில் உள்ளனர்.