கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி சேர்ந்தவர் மாதேஷ்..இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருகிறார்..மாதேஷ் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த உதய நிலா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் ஆன நாள் முதலே உன் வீட்டிற்கு சென்று சொத்தில் பங்கு வாங்கி வருமாறு மாதேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உதய நிலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.. திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் வரதட்சனை கொடுமையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு வந்த உதய நிலா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும் சொத்தில் பங்கு கேட்டு என்னை துன்புறுத்துகிறார்கள் எனவும் தனது தாயிடம் கூறியுள்ளார். மேலும் என்னால் இனி வாழ முடியாது எனவும் என் சாவிற்கு காரணம் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தான் எனவும் தனது தாயிடம் கூறியுள்ளார்.
மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்ட உதய நிலா நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த உதய நிலாவை மீட்டு அவரது குடும்பத்தினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தன் மகளை வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டார் எனவும் என் மகளின் தற்கொலைக்கு காரணமான மாதேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட நான்கு பேர் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் உதய நிலாவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.இன்று காலை வரை அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் உதய நிலாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஊத்தங்கரை ரவுண்டானா சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.. திடீர் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் ஊத்தங்கரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஒரு மணி நேரத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஊத்தங்கரை போலீசார் உறுதி அளித்து உள்ளதால் தற்காலிகமாக சாலை மறியலை உதய நிலாவின் உறவினர்கள் கைவிட்டுள்ளனர்.
படித்த இளைஞர்கள் இதுபோன்ற வரதட்சணை கேட்டு பெண்களை கொடுமைப் படுத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்..