Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Saturday, January 23, 2021

ஜூலை 1 முதல் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி!

ஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற விரும்புகிறதா அரசு?

வருகின்ற ஜூலை 1 முதல் பிஹெச்.டி.(Ph.D.) ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக உயர் கல்வித் துறை பிறப்பித்திருக்கும் அரசாணை, உயர் கல்வி நிறுவனங்களில் கடும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. 2018-ல் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த தரங்களின்படி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கௌரவ விரிவுரையாளர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 மாதாந்திர ஊதியமாக அளிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழகப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் ரூ.15,000 மட்டுமே வழங்கி உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் போக்கைக் கண்டும் காணாமல் இருக்கும் உயர் கல்வித் துறை, உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டும் இவ்வளவு விரைந்து செயல்படுவது வேதனையளிக்கிறது என்கிறார்கள் கௌரவ விரிவுரையாளர்கள்.

வளரும் நாடான இந்தியா, ஆய்வுத் துறையிலும் மேம்பாட்டுத் துறையிலும் பின்தங்கியிருப்பதற்கு, பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி உயர் கல்வித் துறையின் கட்டமைப்புக் கோளாறுகளும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏழை எளிய பின்னணியிலிருந்து உயர் கல்வி நோக்கி வருபவர்கள் தங்கள் ஆய்வுப் படிப்புகளை உரிய காலத்தில் முடிக்க முடிவதில்லை. உடனடி வேலைவாய்ப்பை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அவர்களை ஆய்வுப் படிப்புக்கு ஈர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களின் தரப்பில் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுவதில்லை. பல்கலைக்கழக மானியக் குழு அளிக்கும் ஊக்கத்தொகையைப் பெறும் வாய்ப்பு மிகச் சிலருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒன்றிய மாநில அரசுகளின் ஆய்வு உதவித்தொகைகளும்கூட அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. இதற்கிடையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் ஆய்வுப் படிப்புகளை முடித்த மாணவர்கள் பணிவாய்ப்புக்காக மீண்டும் எழுத்துத் தேர்வுகளைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான சிறப்பதிகாரத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுகளை நடத்தாமல் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையிலேயே உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன.

உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் வெற்றிபெற்றிருந்தால் போதுமானது என்ற அடிப்படையில்தான் சமீப காலமாக நியமனங்கள் நடந்துவந்தன. இப்போது மீண்டும் பிஹெச்.டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மாணவர்களை, குறிப்பாக பெண்களை உயர் கல்விப் பணிவாய்ப்புகளிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றும் முயற்சியாகத்தான் இது பார்க்கப்படும். பணிவாய்ப்புக்கு அவசியமில்லை என்ற நிலையிலேயே ஆய்வு நெறியாளர்கள் தங்கள் மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 

இந்நிலையில், ஆய்வுப் பட்டம்தான் தகுதி என்பது என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் முழுநேர மற்றும் பகுதிநேர பிஹெச்.டி. (Ph.D.) ஆய்வுகளுக்குப் பதிவுசெய்துகொண்டோரில் எத்தனை பேர் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் ஆய்வை முடித்திருக்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தாலே முழு உண்மையும் வெளிப்பட்டுவிடும். தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டாய பிஹெச்.டி. தகுதியானது தனியார் கல்வி நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் திட்டமாகவே தெரிகிறது.

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet