Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Thursday, August 13, 2020

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா?

        நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் நீட் என்னும் நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டு பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்களுக்கு மாறாக, நீட் தேர்வு மட்டுமே மருத்துவப் படிப்புக்கான ஒரே நுழைவாயிலாக மாற்றப்பட்டுவிட்டது. அனைத்துத் தொழிற்கல்வி, கலை-அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் நீட் போன்ற தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

        தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்று பல்கலைக்கழகங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் பொது நுழைவுத் தேர்வு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை உயர்கல்வித் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விளக்குகிறார்கள்.

    மும்மொழிக் கொள்கையைப் போல் நுழைவுத் தேர்வையும் மறுக்க வேண்டும் - முனைவர் எஸ்.கிருஷ்ணசுவாமி, உயிரி தொழில்நுட்ப பேராசிரியர் (ஓய்வு), மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்தைத் தொட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்துவிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்பவர்களின் விகிதம் (Gross Enrollment Ratio-GER) ஏற்கெனவே 49 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்களின் விகிதம், இவ்வளவு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இங்கு நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடும் நுழைவுத் தேர்வு இல்லாமல் இருப்பதும்தான். இதற்கு மாறாக நுழைவுத் தேர்வைக் கொண்டுவருவதால், உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையவே செய்யும்.

    ஏற்கெனவே, சில மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கத் தேசிய அளவிலான பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் அவற்றில் தேர்ச்சிபெறுபவர்கள் பெரும்பாலும் மத்திய அரசுக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தாம். மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சிபெறுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்கள் சார்ந்த வணிகத்தையே அதிகரிக்கும். அவற்றில் ஏழை மாணவர்கள் படிப்பது சாத்தியமல்ல.

    டென்மார்க் போன்ற நாடுகளில் 18 வயதுவரை அனைவருக்கும் இலவசக் கல்வியும், அதற்கு மேல் படிப்பதற்கு அரசு உதவித்தொகையும் உண்டு. அமெரிக்காவில் கல்லூரிப் படிப்புக்கு சாட் (SAT) என்கிற பொது நுழைவுத் தேர்வு உண்டு. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினரும் லத்தீன் வம்சாவளியினரும் இந்த நுழைவுத் தேர்வுகளால் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற விமர்சனங்கள் உண்டு. நுழைவுத்தேர்வு இது போன்ற பாகுபாடுகளைத்தான் அதிகரிக்கும்.

    உயர்கல்வி பெறுவதற்கான தடைகளை நீக்கி, உயர்கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்தால்தான், அனைவருக்கும் கல்வி என்கிற இலக்கை அடைய முடியும். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு என்கிற சொல் எங்குமே இடம்பெறவில்லை.

               மாணவர்களின் அறிவுத்திறனைச் சோதிக்கத்தான் நுழைவுத் தேர்வு என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஒரே ஒரு தேர்வின் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனைச் சோதித்துவிட முடியாது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை நிராகரித்திருப்பதுபோல், நுழைவுத் தேர்வையும் ஏற்க முடியாது என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் கல்வியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடும்.

        ஏற்றதாழ்வுகளை அகற்றினால்தான் தரம் உயரும் - பேராசிரியர் நா.மணி, பொருளாதாரத் துறை தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி தரத்தின் பெயரைச் சொல்லியே நுழைவுத் தேர்வை நடத்துகிறார்கள். ஆனால், தேர்வுகளை வைத்து தரத்தை நிர்ணயிக்க முடியாது. நுழைவுத் தேர்வு மாணவர்களை வெளியேற்றவும் பாகுபடுத்தவுமே செய்யும்.

        பள்ளிக் கல்விக்கு எனப் பல்வேறு வாரியங்கள் இருக்கின்றன. பணக்காரர் களுக்கான பள்ளி, ஏழைகளுக்கான பள்ளி என்று பிரிவினைகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஏழைகள்தாம் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்தப் பாகுபாடுகளை நீக்குவதற்கான திட்டங்கள் எவையும் அரசிடம் இல்லை. உலகில் எந்த நாடுகளிலெல்லாம் அனைவருக்கும் இலவச, தரமான கல்வி சாத்தியமாகியுள்ளதோ, அங்கு எல்லாம் பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் மிகவும் தரமாக இருப்பதைக் காண்கிறோம். எனவே. ஒட்டுமொத்தக் கல்வித் தரத்தை மேம்படுத்த முதலில் பள்ளிக் கல்வியில் நிலவும் ஏற்றதாழ்வுகளை நீக்க வேண்டும்.

    1968 கோத்தாரி கமிஷன் அறிக்கையிலேயே இதற்கான பரிந்துரைகள் தெளிவாக உள்ளன. ஆனால், புதிய கல்விக்கொள்கை அருகிலிருக்கும் பள்ளி பற்றியோ, அனைவருக்கும் தரமான இலவச பொதுக் கல்வி பற்றியோ எதுவும் பேசவில்லை. பள்ளியில் அனைவருக்கும் தரமான, சமமான கல்வியைக் கொடுத்துவிட்டால் கல்லூரிக் கல்வியில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. நுழைவுத் தேர்வும் தேவையில்லை.

    அடிப்படையைச் சீர்திருத்தாமல், நுழைவுத் தேர்வு வைப்பது உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும், விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை மறுக்கவே செய்யும்.

No comments:

Post a Comment

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet