தமிழகத்தில் ஏப்ரல் 6க்கு பின்னர் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கொரோனா அதிகமாக பரவி வந்தாலும் தேர்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை எனவும், ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு தேவையில்லை. அரசு தெரிவித்த கட்டுப்பாடு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால், அந்த தெரு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்.
அங்கு மட்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். ஆனால் ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. இது தவறான தகவல், வெறும் வதந்தி மட்டும் தான். பொதுமக்கள் அதனை நம்பவேண்டாம், தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்றினால் நோய் தொற்றை தவிர்க்கலாம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – இன்று 1779 பேருக்கு தொற்று உறுதி!!
No comments:
Post a Comment