டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி கீழ், தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறுவது இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். இன்று (மார்ச் 30) முதல், ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியுள்ளார்.
மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படுகின்றன. 7301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முடிவுகளை வெளியிட டிஎன்பிஸ்சி முடிவு செய்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment