வாட்ஸ் அப் UPI சேவைக்கு சட்டப்பூர்வ பெயரை, வாட்ஸ் அப் பெயராக வைப்பது கட்டாயம் என அந்நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப், இந்தியாவில் உள்ள பயனாளிகள் இனி வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. இதன் மூலம், மெசேஜ் அனுப்புவது போலவே மிக எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்தது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
வாட்ஸ் அப் செயலியை திறந்தவுடன், மேலே வலது பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், அதில் ‘Payments’ என்ற தேர்வு இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Add payment option’ கிளிக் செய்து, உங்கள் வங்கிக்கணக்கு உள்ள வங்கியை தேர்வு செய்யவும். வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்தவுடன், ஓடிபி மூலம் அது சரிப்பார்க்கப்படும். உங்களின் வாட்ஸ் அப் எண்ணும், வங்கியில் பதிவு செய்திருக்கும் எண்ணும் ஒன்றாக இருப்பது அவசியம். ஓடிபி உறுதி செய்யப்பட்டப்பின் ’Done’ என்பதை க்ளிக் செய்யதவுடன், அடுத்து உங்களின் யூபிஐ ஐடி-யை நீங்கள் பேமண்ட் ஆப்ஷனில் காணமுடியும். அதோடு இணைக்கப்பட்ட உங்களின் வங்கி விவரமும் அதில் வந்துவிடும். அதன்பிறகு விரும்பிய நபருக்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நடைமுறை இருந்தது.
இந்நிலையில், புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. அதில், யாரெல்லாம் வாட்ஸ் அப் UPI சேவையை பயன்படுத்துகிறீர்களோ அவர்கள் கட்டாயம் சட்டப்பூர்வ பெயரை தமது வாட்ஸ் அப் பெயராக வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அந்த பெயர் தங்களின் வங்கியில் உள்ள பெயராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம், UPI சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சட்டப்பூர்வ பெயர் பணம் பெறும் அல்லது பணம் அனுப்பும் நபருக்கு காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், NPCI பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இந்த அப்டேட்டை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ள வாட்ஸ் அப், UPI சேவையை பயன்படுத்தி நடைபெறும் பண பரிவர்த்தனை மோசடிகளை தடுக்கவே இதனை நடைமுறைப் படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, வாட்ஸ் அப் Profile Name 25 எழுத்துக்களில் விரும்பிய emojis உடன் வைக்கும் வசதியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் பயன்பாட்டில் உள்ள இந்த வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனை நடைமுறையை, பெரிய அளவில் விரிவாக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.