தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும்.
50 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை பல்கலைக்கழகமும் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்துவிட்டன. மாநில அரசின் கொள்கையாக மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் என மாநில அரசு தொடங்கும் நிலையில், ஆளுநர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுவர முடியுமா?
இந்த அடிப்படையில் பார்த்தால், ஆளுநர் அரசமைப்பில் சொல்லப்பட்ட அவரது கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாகப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைப் பார்ப்பதே அவருக்குப் பெரிய பணியாக இருந்துவருகிறது. இதனால்தான் தமிழ்நாட்டின் ஆளுநர், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்கூடத் தன் கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல், அவர் பதவியின் வழி வந்துள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பெரிதும் தன் கையில் எடுத்துப் பணியாற்றிவருகிறார்.
பிரிட்டிஷ் காலத்தில் ஆளுநர்கள் பல்கலைக் கழகத்தின் தலைவர்களாக இருந்த காரணத்தால் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் பிரிட்டிஷ் ராணியின் பிரதிநிதிகளாக இங்கு பணியாற்றினார்கள். அதிகாரம் பெற்ற ஆளுநர்கள் இருந்ததால் அவர்கள் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்துவந்தனர். இந்தியா விடுதலை பெற்ற 1947-க்குப் பிறகு இந்தியாவின் எந்தவொரு தனிநபருக்கும் ராஜ அதிகாரம் இல்லை. இந்தியா ஒரு பரிபூரண ஜனநாயக நாடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு வேந்தரோ துணைவேந்தரோ இன்றைய சூழ்நிலையில் தேவைதானா என்பதையும் மாநில அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆகவே, பல்கலைக்கழக வேந்தரைத் தலைவர் என்றும் துணைவேந்தர்களை துணைத் தலைவர் என்றும் மாற்றம் செய்திட வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களில் குடியரசுத் தலைவர் நோக்கராக இருப்பதைப் போல் ஆளுநரை அதிகாரமற்ற நோக்கராக நியமிக்கலாம்.
மத்திய அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் கல்வியாளர்களைத் தலைவராக நியமிப்பதுபோல தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சிறப்பு பெற்ற கல்வியாளர்களைத் தலைவர்களாக நியமிக்கலாம். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே துணைவேந்தர்களை நியமிப்பதுபோல் மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுத் துணைவேந்தர்களை நியமிக்கலாம். தற்போது கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவு பெரிதும் தேவையானதாகும். இதனை ஆராய்ந்து மேற்கூறியதை ஆலோசிக்கலாம், நிறைவேற்றலாம்.
No comments:
Post a Comment